வெனிசுலாவில் எண்ணெய் உள்கட்டமைப்புகளுக்கு சேதமா?
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அந்நாட்டின் எண்ணெய் உள்கட்டமைப்புகளுக்கு உடனடி சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மிகக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரங்கள் எவற்றிலும் முக்கியமான எண்ணெய் நிறுவன உள்கட்டமைப்புகள் எதுவும் அமையப் பெறவில்லை என தெரியவருகின்றது.
குறிப்பாக, வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் மையமான மராகைபோ ஏரிக்கு (Lake Maracaibo) அருகிலுள்ள மராகைபோ நகர அதிகாரிகள், தங்கள் பகுதியில் யாருக்கும் காயங்களோ பாதிப்புகளோ ஏற்பட்டதாக அறிக்கை எதுவும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே மிக அதிகமான எண்ணெய் இருப்பைக் கொண்ட நாடாக வெனிசுலா மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பல தசாப்தங்களாக நிலவும் தவறான நிர்வாகம், முதலீடற்ற நிலை மற்றும் சர்வதேசத் தடைகள் காரணமாக, அதன் தற்போதைய கச்சா எண்ணெய் உற்பத்தி ஒட்டுமொத்த உற்பத்தித் திறனில் ஒரு சிறிய பகுதியாக மட்டுமே இருந்து வருகிறது என்று அதிகாரப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன.
வெனிசுலாவில் இயங்கி வரும் பல முன்னணி எரிசக்தி நிறுவனங்கள், தங்களது எண்ணெய் வயல்கள், ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் நிலையை ஆய்வு செய்வதற்கு முன்பாக, தங்களது ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள நீண்ட நேர மின் தடையானது, மின் விநியோகம் சீராகும் வரை கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை வெகுவாகப் பாதிக்கக்கூடும் என ஒரு முக்கியத் தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.




