நேபாள பேரிடர் – 07 சதவீதமானோரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன
நேபாளத்தில் திடீரென ஏற்பட்டவெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களின் உடல்களில் வெறும் 7 சதவீதம் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெள்ளம் ஏற்பட்டு நாட்கள் பல கடந்துவிட்ட நிலையில், உயிர்பிழைத்தவர்களை கண்டுப்பிடிப்பதில் மீட்பு பணியாளர்கள் சோர்வடைந்துள்ளதுடன், நம்பிக்கையும் தளர்ந்துள்ளது.
இந்த பேரிடரில் குறைந்தது 1,399 பேர் உயிரிழந்த நிலையில், 636 வெளிநாட்டினர் உட்பட சுமார் 5,200 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட 1,206 உடல்களிலிருந்தும், காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து 1,889 மாதிரிகளிலிருந்தும் டிஎன்ஏ (DNA) மாதிரிகளைச் சேகரித்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இருப்பினும், இதுவரை மொத்தம் 105 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிக்காக அதிகாரிகள் வெப்ப உணரி கொண்ட ட்ரோன்கள் (thermal drones) மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியதுடன், நிபுணர்களையும் வரவழைத்துள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியின் ஒரு பகுதியாக, நேபாளத்தின் நீர்மின் நிலையச் சுரங்கப்பாதைகளில் சிக்கியிருந்த சிலர் வியக்கத்தக்க வகையில் மீட்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், மீட்புப் பணிகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கிடைத்து வந்த நிலை தற்போது குறைந்துவிட்டதாக வெளிநாட்டில் வாழ்பவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
“குறுகிய வான்வெளிப் பரப்பு, மலைப்பாங்கான கடினமான நிலப்பரப்பு மற்றும் குவிந்துள்ள இடிபாடுகளின் அளவு ஆகியவை காணாமல் போனவர்களைக் கண்டறிவதில் உள்ள முக்கிய சவால்களாக உள்ளன” என்று அந்தத் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




