விசாரணைக்கு அஞ்சியா சிங்கப்பூர் பறந்தார் ஷிராந்தி ராஜபக்ச?
“சிகிச்சைக்காகவே ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் சென்றுள்ளார்; அவர் விசாரணையைத் தவிர்ப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடவில்லை,” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஷிராந்தி ராஜபக்சவின் சிங்கப்பூர் பயணம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
“மருத்துவ ஆலோசனையின்பேரில், சிகிச்சைக்காகவே ஷிராந்தி ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளார். இதற்கான பயணத் திகதி ஏற்கனவே முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவர் எந்தவொரு விசாரணையையும் தவிர்ப்பதற்காகச் செல்லவில்லை.
விமான நிலையத்திற்குச் செல்லும்வரை அவருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருக்கவில்லை. கடைசி நேரத்தில், விமான நிலையத்தில் வைத்தே அந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஷிராந்தி ராஜபக்ச இதற்கு முன்னரும் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார். எனவே, அவர் ஒருபோதும் விசாரணைகளைத் தவிர்க்க முயலவில்லை,” என்றார்.




