பருத்தித்துறை மயானத்தில் மோட்டார் குண்டு மீட்பு
யாழ். பருத்தித்துறை – சுப்பர்மடம் இந்து மயானத்துக்கு அருகிலுள்ள இடுகாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் குண்டு ஒன்று, நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப்படையினரின் உதவியோடு இன்று காலை பருத்தித்துறைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்த இடுகாட்டில் மோட்டார் குண்டு ஒன்று கிடப்பதாக நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்த பருத்தித்துறைப் பொலிஸார், அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பை ஏற்பாடு செய்தனர்.
அண்மையில் இந்த இடுகாடு ஜேசிபி இயந்திரம் மூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது என்றும், அப்போது மண்ணுக்குள் புதைந்திருந்த குண்டு மேலே கிளறப்பட்டு, தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக வெளிப்பட்டிருக்கலாம் என்றும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும், இது கடந்த காலப் போர்ச் சூழலின்போது மறைத்து வைக்கப்பட்ட மோட்டார் குண்டாக இருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.




