முத்தமிட்டதால் நேர்ந்த அவலம் : பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி
இந்தோனேசியாவில் திருமணமாகாத ஜோடிகள் முத்தமிட்டுக்கொண்டிருந்த காணொளி டிக்டொக்கில் வைரலானதை தொடர்ந்து அவர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் பிரம்படி வழங்கப்பட்டுள்ளது.
காரில் 22 வயதுடைய ஆணும், 25 வயதுடைய பெண்ணும் முத்தமிட்டுக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்தின் படி அவர்களுக்கு பிரம்படி வழங்கப்பட்டுள்ளது.
ஆச்சேவில் உள்ள புஸ்தானுசலாடின் (Bustanussalatin) நகரப் பூங்காவில் அமைக்கப்பட்ட ஒரு மேடையில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியாவில், இஸ்லாமியச் சட்டத்தின் ஒரு வடிவத்தை அமல்படுத்தும் ஒரே மாகாணமாக ஆச்சே விளங்குகிறது.
பிரிவினைவாத மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2006-ல் இந்தோனேசியாவின் மதச்சார்பற்ற மத்திய அரசாங்கத்தால் இந்த மாகாணத்திற்கு மதச் சட்டத்தை அமல்படுத்தும் உரிமை வழங்கப்பட்டது.
2015 இல், ஆச்சேவின் மக்கள்தொகையில் ஏறக்குறைய ஒரு சதவிகிதமாக உள்ள முஸ்லிம் அல்லாதவர்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இதற்கமைய விபச்சாரம் மற்றும் ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு ஒழுக்கக்கேடான குற்றங்களுக்கு 100 கசையடிகள் வரை வழங்க இந்த சட்டம் அனுமதிக்கிறது.
சூதாட்டம், மது அருந்துதல், பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிதல் மற்றும் ஆண்கள் வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவறவிடுதல் ஆகியவற்றுக்கும் பிரம்படி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





