ஓய்வுபெறமாட்டேன் : அரசியல் பயணம் தொடரும் – மஹிந்த சூளுரை
“எனது அரசியல் பயணம் தொடரும். நாம் மக்கள் பக்கம் நிற்பதாலேயே இலக்கு வைக்கப்படுகின்றோம். மக்கள் விரும்பினால் 2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவைக் களமிறக்குவோம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கண்டிக்கு வருகை தந்திருந்த மஹிந்த ராஜபக்ச , ஶ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை கவலையளிக்கின்றது. இது பற்றி என்னிடம் கேட்பதைவிட, நாட்டு மக்களிடம் கேட்டறிவதுதான் நல்லது.
நாம் எப்போதும் நாட்டு மக்களுடனேயே இருக்கின்றோம். அதனால்தான் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுகின்றோம். எனினும், மக்களுக்காக நாம் தொடர்ந்து முன்னிற்போம். நான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டேன்.
2029 ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விரும்பும் வேட்பாளரையே நாம் களமிறக்குவோம். நாமல் ராஜபக்சவை மக்கள் கோரினால், அவர் நிச்சயம் போட்டியிடுவார். மக்கள் கோராவிட்டால் அவர் போட்டியிட மாட்டார்” என்றும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.




