வடக்கில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு முடிவு கட்டப்படும்: அமைச்சர் உறுதி
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகளை வழங்குவதுடன், மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு தன்னாலான அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பேன் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட மீனவ சமூகத்தின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று (11.08.2026) நடைபெற்றது.
இதன்போது, மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் மீனவர்கள் தமது கடும் அதிருப்தியை அமைச்சரிடம் வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்றொழில் திணைக்களமும் கடற்படையினரும் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்ததுடன், இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,
“முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது. குறிப்பாக, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும், கடல் வளங்களை அழிக்கும் வகையிலும் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும். புதிதாக நியமனம் பெறவுள்ள 8 உத்தியோகத்தர்கள் விரைவில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர். இதன் மூலம் சட்ட அமுலாக்கம் மற்றும் மீனவர்களுக்கான சேவைகளை மேலும் வலுப்படுத்த முடியும்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் எந்தவிதமான தயக்கமும் இருக்காது. சிறிய வலைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத பர்ஸ் சீன் மீன்பிடி, டைனமைட் பயன்படுத்துதல், எல்லை மீறிய மீன்பிடி மற்றும் ஏரிகளுக்குள் இயந்திரப் படகுகளைப் பயன்படுத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அரசாங்கத்தின் நோக்கம் எந்தவொரு மீனவரின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பது அல்ல. மாறாக, சட்டத்தை மதித்து தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், எதிர்கால சந்ததியினருக்காக கடல் மற்றும் நீர்வளங்களை நிலையான முறையில் பாதுகாப்பதே எமது பொறுப்பாகும்.
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு எனக்குள்ள முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பேன். மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அமைச்சு தொடர்ச்சியாக முன்னெடுக்கும்.
மீனவர்களும் அரசாங்க நிறுவனங்களும் இணைந்து செயற்பட்டால்தான் நிலையான மீன்பிடித் துறையை உருவாக்க முடியும். எனவே, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தவிர்த்து, பொறுப்பான மற்றும் நிலையான மீன்பிடியை முன்னெடுக்குமாறு அனைத்து மீனவர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் தெரிவித்தார்.




