பிரித்தானியாவை 5ஆது முறை உலுக்கும் வெப்ப அலை: அவசரகால கூட்டத்துக்கு ஏற்பாடு
பிரித்தானியாவில் 2026 ஆம் ஆண்டில் ஐந்தாவது முறையாகக் கடும் வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், தீவிர வெப்பம், காட்டுத்தீ மற்றும் வறட்சியை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) அரசாங்கத்தின் இந்த அவசரகாலக் குழு கூட்டத்திற்கு புதன்கிழமை தலைமை தாங்குவார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை முதல் தெற்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்து மற்றும் மிட்லேண்ட்ஸின் சில பகுதிகளில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை 966 காட்டுத்தீ சம்பவங்களுக்குத் தீயணைப்புப் படையினர் பதிலளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதில் ஆகஸ்ட் முதல் 10 நாட்களில் மட்டும் 185 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதேவேளை, விவசாயத் துறையும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக எச்சரித்துள்ளது.
மிகக் குறைந்த மழைப்பொழிவு மற்றும் அதிக வெப்பநிலை ஆகியவற்றின் காரணமாகப் பிரித்தானியாவின் பெரும்பகுதி வறட்சியைச் (flash drought) சந்தித்து வருகிறது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவை கடந்த 190 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் வறட்சியான ஜூலை மாதத்தைப் பதிவு செய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத் தரவுகளின்படி, நாட்டில் சுமார் 4.5 கோடி (45 million) மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர், மேலும் 2.7 கோடி (27 million) மக்கள் தங்களது நீர் பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்.
பிரித்தானியாவில் இந்த ஆண்டில் வெப்பம் தொடர்பான காரணங்களால் 2,877 பேர் உயிரிழந்துள்ளதாகக் சுகாதார அதிகாரிகள் கடந்த மாதம் தெரிவித்தனர்.
காலநிலை மாற்றத்தால் தீவிரமடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறும் இந்த நீண்டகால வறட்சியான வானிலை, விவசாயம், பொதுக் குடிநீர் விநியோகம் மற்றும் வனவிலங்குகளைப் பெரிதும் பாதித்துள்ளது.





