உத்தரப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்து – 15 மாணவர்கள் பலி
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பயிற்சி மையம் இயங்கி வந்த கட்டிடம் ஒன்றில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது, ஏராளமானோர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்ட நிலையில் பல மாணவர்கள் தற்காத்துக்கொள்ளும் நோக்கில் கட்டிடத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் ஒரு மணிநேரம் போராடிய பின் தீ அணைக்கப்பட்டதாகவும், இதன் பின்னர் இடிபாடுகளில் இருந்து 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கட்டிடத்தில் இருந்து குதித்து காயமடைந்த பலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் இந்திய ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிதியுதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.




