போதைப்பொருள் கடத்தப்பட்ட சொகுசு கார் மீட்பு: தப்பியோடிய கும்பலுக்கு வலை
திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பவெவ காட்டுப்பகுதியில் சொகுசு கார் ஒன்றை நிறுத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்ய மொரவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலைப் பகுதியில் இருந்து சொகுசு கார் ஒன்றில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு, குறித்த சொகுசு காரை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர்.
எனினும், பொலிஸாரின் கட்டளையை மீறி காரை நிறுத்தாமல் அதிவேகமாகச் செலுத்திச் சென்ற ஓட்டுநர், வழியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அத்தாபெந்திவெவ வீதியினூடாகத் தப்பிச் சென்ற அக்காரை, தம்பவெவ குறுக்கு வீதியில் உள்ள காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர்.
பின்னர், காரில் இருந்த போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டு சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், தப்பியோடிய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர புலனாய்வு விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




