ஆஸ்திரேலியா சொர்க்கம்: தாயகம் திரும்பும் ‘ஐ.எஸ். பெண்கள்’ உருக்கம்!
சிரியாவில் ஐஎஸ் (ISIS) அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த ஆஸ்திரேலியப் பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் இன்று (07) ஆஸ்திரேலியாவை வந்தடையவுள்ளனர்.
நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது குழந்தைகள் அடங்கிய குழுவினர் மெல்போர்ன் மற்றும் சிட்னி நகரங்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தாயகம் திரும்பும் பெண்களில் சிலர் பயங்கரவாதக் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
சிரியாவின் அல்-ரோஜ் (Al Roj) அகதிகள் முகாமில் பல ஆண்டுகளாகக் வைக்கப்பட்டிருந்த இந்தக் குழுவினர், டமாஸ்கஸ் மற்றும் தோஹா வழியாக ஆஸ்திரேலியா வருகின்றனர்.
கட்டார், தோஹாவில் விமானம் மாறுவதற்காகக் காத்திருந்தபோது செய்தியாளரிடம் பேசிய பெண்கள், தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக ஆஸ்திரேலியா திரும்புவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தனர்.
சிரியாவின் வாழ்க்கை “நரகம்” போல இருந்ததாகவும், ஆஸ்திரேலியாவே தங்களுக்கு “சொர்க்கம்” என்றும் அவர்கள் உருக்கமாகக் கூறினர்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், பயங்கரவாத அமைப்பில் சேர முடிவெடுத்தது அந்த நபர்களின் மிக மோசமானத் தேர்வு என்று சாடினார்.
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
தாயகம் திரும்பும் குழந்தைகளுக்கு வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான சிறப்பு மறுவாழ்வுத் திட்டங்கள் (Countering violent extremism programs) வழங்கப்படும் என்று விக்டோரியா மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.





