‘காவந்திஸ்ஸ’ யானையின் மரணம் குறித்து விசாரணை: நிபுணர் குழு நியமனம்
‘காவந்திஸ்ஸ’ யானையின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளல், காட்டு யானைகளின் நலனுக்கான உரிய செயற்பாட்டு முறை ஒன்றைத் தயாரித்தல் மற்றும் யானைகளைப் பாதுகாக்கும் தேசிய வேலைத் திட்டம் தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சின் செயலாளர் ஏ.எச். சரத் விஜேசிங்கவின் தலைமையிலான இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் டி. சமிந்த பெர்னாண்டோ, பேராசிரியர் ஏ.ஜி. அனில் புஷ்பகுமார, பேராசிரியர் யூ.கே. காலிங்க பத்மலால், கலாநிதி ஜகத் குணவர்தன மற்றும் சட்டத்தரணி சரக ஜயரத்ன ஆகியோர் செயற்படுகின்றனர்.
இந்த நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் டப்ளியு.டப்ளியு. ஹெரிசன் செயற்படுவார்.
“காவந்திஸ்ஸ” யானையின் மரணம் நிகழ்ந்த விதம், அதில் தாக்கம் செலுத்திய உடனடி மற்றும் மறைமுக காரணங்கள், சிகிச்சை நடவடிக்கைகளில் ஏதாவது தவறுகள் அல்லது கவனக்குறைவுகள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணைகளை நடத்துவதுடன், காட்டு யானைகளின் நலனுக்காக உரிய செயற்பாட்டு நடைமுறை ஒன்றைத் தயாரிப்பதும், யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதும் இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளாகும்.
இந்தச் செயற்பாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் இக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான தமது இறுதி விசாரணை அறிக்கை, முன்மொழியப்பட்ட காட்டு யானை நலனுக்கான உரிய செயற்பாட்டு நடைமுறைக் கட்டமைப்பு மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய முழுமையான அறிக்கை, 30 நாட்களுக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.





