வறுமை ஒழிப்பில் இந்தியா முன்னேற்றம் – உலக வங்கி தகவல்
இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் கடந்த 2011ஆம் ஆண்டில் 27.1 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டில் அது 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலகின் மிக வேகமாக வறுமையைக் குறைத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்வதாக உலக வங்கியின் 2026 ஒக்டோபர் மாத வறுமை மற்றும் சமத்துவ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக வங்கியின் அறிக்கையின்படி, நாளொன்றுக்கு 3 அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானத்தில் வாழும் மக்களின் விகிதமே தீவிர வறுமைக்கான அளவுகோலாகக் கணக்கிடப்படுகிறது. இதன்படி, 2011ஆம் ஆண்டில் 27.1 சதவீதமாக இருந்த தீவிர வறுமை விகிதம், 2023ஆம் ஆண்டில் 2.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளை, கீழ் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான நாளொன்றுக்கு 4.20 அமெரிக்க டொலர் என்ற வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்த இந்திய மக்களின் விகிதம், 2011ஆம் ஆண்டில் 57.7 சதவீதமாக இருந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் 16.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதன் மூலம், குறித்த 12 ஆண்டுகளில் சுமார் 496 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்கு மேலான நிலையை அடைந்துள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; வருமான ஏற்றத்தாழ்வு தொடர்கிறது
இந்தியாவில் வறுமை குறைந்துள்ள போதிலும், வருமான ஏற்றத்தாழ்வு தொடர்ந்து காணப்படுவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2023ஆம் ஆண்டில் அதிக வருமானம் பெறும் முதல் 10 சதவீத தொழிலாளர்களின் சராசரி வருமானம், குறைந்த வருமானம் பெறும் கடைசி 10 சதவீத தொழிலாளர்களின் வருமானத்தை விட சுமார் 13 மடங்கு அதிகமாக இருந்துள்ளது.
மேலும், 2017 முதல் 2023 வரையான காலப்பகுதியில் இந்தியாவில் சுமார் 134 மில்லியன் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, கிராமப்புற பெண்கள் ஊதியத்துடன் கூடிய வேலைகளில் இணைந்தமை இந்த அதிகரிப்பில் முக்கிய பங்காற்றியுள்ளது.
எனினும், வேலைவாய்ப்புகள் அதிகரித்த போதிலும், பணவீக்கத்தின் தாக்கத்தைக் கணக்கில் கொண்ட உண்மையான வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பெரும்பாலான புதிய வேலைவாய்ப்புகள் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட துறைகளில் உருவாகியுள்ளமையும் கவலைக்குரிய விடயமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வறுமை அதிகம்
இந்தியாவில் வறுமை குறைந்துள்ள போதிலும், நகர்ப்புறங்களுடன் ஒப்பிடுகையில் கிராமப்புறங்களில் வறுமை அதிகமாகக் காணப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 4.20 அமெரிக்க டொலர் என்ற வறுமைக் கோட்டின் அடிப்படையில், கிராமப்புறங்களில் வறுமை விகிதம் 19.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.6 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
குறிப்பாக, உத்தரப் பிரதேசம் முதல் மேற்கு வங்கம் வரையிலான மாநிலங்களை உள்ளடக்கிய பிராந்தியத்தில் இந்தியாவின் மொத்த வறிய மக்களில் சுமார் 57 சதவீதமானோர் வாழ்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வறுமையைக் குறைப்பதில் நுகர்வுச் செலவினங்களின் அதிகரிப்பு, வேலைவாய்ப்பு வளர்ச்சி, குறிப்பாகப் பெண்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் உணவு மானியங்கள் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், வறுமையைத் தொடர்ந்து குறைப்பதற்கு நிலையான வருமானத்தை வழங்கக்கூடிய தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதும் அவசியம் என உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.





