இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து
இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நாளை ( 27 ) கையெழுத்தாகும் என்று இந்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) தெரிவித்தார்.
நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சருடன் ஆக்ரா சென்றிருந்தபோது அவருடன் உரையாடியதை தொடர்ந்து தெரிவித்திருப்பதாவது,
“இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பல ஆண்டு கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, நாளை கையெழுத்தாக உள்ளது.
இந்த ஒப்பந்தம் காரணமாக இந்தியாவிலிருந்து நியூசிலாந்துக்குச் செல்லும் பொருட்களில் சுமார் 70 சதவீதம் எந்த இறக்குமதி வரியும் இன்றி அங்கு சென்றடையும்.
இந்த ஒப்பந்தம், பல துறைகளுக்கு, குறிப்பாக பாரம்பரிய மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கும்.
நமது ஆக்ரா தோல் வணிகம், உத்தரப் பிரதேச கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மற்றும் நமது ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தில் பொருட்களைத் தயாரிக்கும் தச்சர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் இன்னும் பல துறைகளுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சில மாதங்களில், இது இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழியாக அமையும்.
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும்” என்றார்.





