இந்தியா, சீனாவுக்கிடையில் மீண்டும் தலைதூக்கும் எல்லைப் பிரச்சினை
இந்தியாவின் நடவடிக்கையானது எதிர்கால எல்லைப் பேச்சுவார்த்தைகளில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என சீன நிபுணர்களை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரச ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ (Global Times) செய்தி வெளியிட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 27 புவியியல் இடங்களுக்கு இந்தியா முறையான பெயர்களைச் சூட்டியதற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அந்தப் பகுதிகள் சீனாவின் ‘சாங்னான்’ (Zangnan) பிராந்தியத்திற்குட்பட்டவை என அரச ஊடகமான குளோபல் டைம்ஸ் உரிமை கோரியுள்ளது.
திபெத் தன்னாட்சிப் பகுதியின் ஒரு பகுதியாகச் சீனா உரிமை கோரும் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அதன் எல்லைப் பகுதிகளைக் குறிக்கவே ‘சாங்னான்’ என்ற சொல்லை பெய்ஜிங் பயன்படுத்துகிறது.
முன்னதாக ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் (Guo Jiakun) பேசியதை சுட்டிக்காட்டியுள்ள அப்பத்திரிகை, சாங்னான் பிராந்தியம் சீனாவுக்குச் சொந்தமானது என்றும், இந்தியாவால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ‘அருணாச்சலப் பிரதேசத்தை’ சீனா அங்கீகரிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
சாங்னானில் உள்ள சில இடங்களுக்குச் சீனா முறையான பெயர்களை வெளியிடுவது அதன் இறையாண்மை உரிமைக்கு உட்பட்டது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




