எல் நினோ’ தாக்கம் – உலகம் முழுவதும் 04 இலட்சத்திற்கு மேற்பட்ட மரணங்கள் நிகழும்
இந்த ஆண்டு நிலவும் தீவிரமான ‘எல் நினோ’ (El Nino) வானிலை நிகழ்வு உலகளாவிய வெப்பநிலையை வெகுவாக உயர்த்துவதால், வரும் பிப்ரவரி மாதம் வரை உலகம் முழுவதும் அதிகளவிலான மரணங்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய உலகம் முழுவதும் 4,51,000 மரணங்கள் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த வெப்பமடைதல் நிகழ்வு, மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை மேலும் தீவிரமாக்குவதுடன், இதுவரை பதிவானவற்றிலேயே மிக வலிமையான நிகழ்வாகவும் அமையக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இது இந்த ஆண்டின் (2026) பிற்பகுதியில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் ‘கிளைமேட் இம்பாக்ட் லேப்’ (Climate Impact Lab) மேற்கொண்ட ஆய்வின்படி, ஜூன் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகளால் வளரும் நாடுகளே மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
ஆப்பிரிக்காவின் சாஹெல் (Sahel) பிராந்தியத்தில், சாதாரண ஆண்டை விட கூடுதலாக 66,800 வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் ஏற்படலாம். இதில் ஏறக்குறைய பாதி எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நைஜீரியாவில் மட்டுமே நிகழக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்தோனேசியாவில் 19,300 பேரும், பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் 19, 400 பேரும் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 15,800-ஆகவும், பிரேசிலில் 13,300-ஆகவும் இருக்கக்கூடும்.
இதேவேளை எல் நினோ நிகழ்வின் காரணமாக வரும் மாதங்களில் உலகளாவிய நிலப்பரப்பின் வெப்பநிலை இயல்பை விட 1.2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும், இதனால் சாதாரண ஆண்டுகளை விட 44 சதவீதம் அதிகமான ‘தீவிர வெப்ப நாட்கள்’ (extremely hot days) ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.




