உக்ரைன், ரஷ்யா போரையும் நிறுத்துவேன்: ட்ரம்ப் சபதம்!
“உலகில் இதுவரை 9 போர்களை நிறுத்திவிட்டேன். உக்ரைன், ரஷ்யா மோதலையும் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கின்றேன்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையில் 3 நாள் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப்,
” இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றியை நினைவுகூரும் வகையில் ரஷ்யாவில் கொண்டாடப்படும் வெற்றி தினத்தை முன்னிட்டு, மே 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களுக்குப் போர்நிறுத்தம் செய்ய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.” என்று குறிப்பிட்டார்.
நான் ஏற்கனவே எட்டு அல்லது ஒன்பது போர்களைத் தீர்த்து வைத்துள்ளேன். இந்தப் போரை நான் முடிவுக்குக் கொண்டுவரும் பத்தாவது போராகப் பார்க்க விரும்புகிறேன்”
என ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மூன்று நாள் போர்நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க தான் விரும்புவதாகவும், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.





