தேர்தல் முடிவுகள் வந்த பின் எப்படி செயற்பட வேண்டும் – விஜய் இட்ட கட்டளை
தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் செயற்பட வேண்டிய விடயம் தொடர்பில் நடிகர் விஜய் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 02 சட்டமன்ற தொகுதிகளில் களமிறங்கியுள்ளார்.
தவெக தமிழ்நாட்டின் எடப்பாடி தொகுதியை தவிர்த்து 233 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுயேட்சை வேட்பாளருக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்தார்.
மே 4 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த சூழலில் தவெக தலைவர் விஜய் கடந்த 28 ஆம் திகதி திருச்செந்தூர் சென்று அங்கு தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்று அங்கிருந்து ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
இந்நிலையில் இன்று பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் கலந்துரையாடினார். இதன்போது வேட்பாளர்களுக்கு விஜய் சில கட்டளைகளை இட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
“வெற்றி பெற்று விட்டு வேறு எங்கும் சென்று விடாதீர்கள். நேரடியாக பனையூர் வாருங்கள். நான் உங்களுக்காக காத்திருப்பேன். எல்லோரும் நம்பிக்கையுடன் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருங்கள்” என விஜய் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த கருத்து கணிப்பு வெளியானது. தமிழ்நாடு பொறுத்தவரை திமுக ஆட்சி அமைக்கும் என பெரும்பான்மையான நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தவெக 98 – 120 இடங்களிலும், திமுக 92 – 110 இடங்களிலும், அதிமுக 22 முதல் 32 இடங்களிலும் வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஐந்து தேர்தல்களில் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் கணித்தவை நடந்துள்ளது. குறிப்பாக, கடந்த காலத்தில் ஆக்சிஸ் மை இந்தியா மேற்கொண்ட கணிப்புகளில் பெரும்பான்மையானவை சரியாகவும் அமைந்துள்ளதால் இந்த தகவல் தவெக தொண்டர்களுக்கும், கட்சி தலைமைக்கும் உற்சாகம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.





