இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டுங்கள்: அமெரிக்க மண்ணில் லெபனான் ஜனாதிபதி முழக்கம்
தெற்கு லெபனானில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தால் மட்டுமே ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களைக் களைவது சாத்தியமாகும் என்று லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் (Joseph Aoun) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மற்றும் அவரது தூதுக்குழுவினரைக் கெளரவிக்கும் வகையில், அமெரிக்காவிற்கான லெபனான் தூதர் நாதா ஹமாதே மொஅவாத் (Nada Hamadeh Moawad) வாஷிங்டன் டி.சி.யில் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவ்ன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமெரிக்க நாடாளுமன்ற (காங்கிரஸ்) உறுப்பினர்கள் மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பேசிய அவர்:
“லெபனான் மட்டுமே பயன் பெற வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக இந்த முழுப் பிராந்தியத்திற்காகவுமே லெபனான் முன்வைக்கும் கட்டமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.
ஏனெனில், உங்கள் நாடு எந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டதோ, அதே அடித்தளத்தில்தான் நமது லெபனானும் அமைந்துள்ளது,” என்றார்.
“தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் நாம் உண்மையிலேயே நேர்மையாக இருந்தால் மட்டுமே ஹிஸ்புல்லாவை ஆயுதபாணிகளாக இல்லாமல் செய்ய முடியும்.
அதாவது, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வர வேண்டும், நாடு முழுவதும் இராணுவம் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற வேண்டும், மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்கள் அனைத்தும் முற்றிலும் அரசாங்கத்தால் மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும்,” என்றும் வலியுறுத்தினார்.
முன்னதாக, ஜனாதிபதி அவ்ன் செவ்வாயக்கிழமை, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பைச் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





