கிரீன்லாந்து விவகாரம் – அமெரிக்கா, டென்மார்க் இடையே ஒப்பந்தம்
கிரீன்லாந்தின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் புதிய ஒப்பந்தம் ஒன்றை அறிவித்துள்ளன.
இந்த முயற்சியானது அப்பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் அமெரிக்கா, டென்மார்க் இடையிலான இராஜதந்திர மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு “பாதுகாப்பு மற்றும் பிற அனைத்துத் தேவைகள் மீதும் நிரந்தரக் கட்டுப்பாட்டை” வழங்கும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் “ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது” என்று டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான மேலதிக விபரங்கள், ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அம்சங்கள் தொடர்பில் அவர் கருத்துரைக்கவில்லை.
இதேவேளை இது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், இந்த ஒப்பந்தத்தால் “அமெரிக்காவிற்கு எந்தச் செலவும் இல்லை” என்றும், “கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் காக்கவும் தேவையானதைச் செய்யும்” திறனை இது அமெரிக்காவிற்கு வழங்கும் என்றும் கூறினார்.
அதேநேரம் அமெரிக்காவின் எதிரி நாடுகள் எதுவும் கிரீன்லாந்தில் இராணுவ இருப்பை வைத்திருக்கவோ அல்லது “எங்கள் வெளிப்படையான எழுத்துப்பூர்வ அனுமதியின்றி கிரீன்லாந்தில் முக்கியத்துவம் வாய்ந்த முதலீடுகளைச் செய்யவோ” கூடாது என்ற விதி இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
மேலும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பதை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் உறுதிப்படுத்தினார்.
இந்த ஒப்பந்தம் “ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பிராந்தியத்தில் நமது பொதுவான பாதுகாப்பை வலுப்படுத்தும், அதே வேளையில் “டென்மார்க் அரசின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரிக்கிறது” என்றும் அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்திற்குச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இன்னும் தேவை என்றும், “இது நடைமுறைக்கு வருவதற்குத் தேவையான நாடாளுமன்ற நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறினார்.




