உயர்நீதிமன்ற வழிகாட்டலுக்கமைய செயல்படுவோம்: அரசு உறுதி
” மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் நோக்கிலேயே அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கும் சட்ட வியாக்கியானத்திற்கு அமையவே நாடாளுமன்றம் செயல்படும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று மேலும் கூறுகையில்:
“நாட்டில் நீண்டகாலமாகக் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் துரிதமாக விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த இரு தேர்தல்களின்போதும் நாட்டு மக்களுக்கு நாங்கள் உறுதியளித்திருந்தோம்.
அதற்கு அமைவாகவே தற்போது நீதித்துறையில் பல்வேறு மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாகவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பிற்கு உட்பட்டே இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் எவருக்கேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அதனை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம்.
இது குறித்து உயர் நீதிமன்றம் அளிக்கும் சட்ட விளக்கங்கள் மற்றும் தீர்ப்பிற்கு அமைய நாடாளுமன்றம் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும்.
22-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிச் சேவைத் திருத்தச் சட்டமூலம் ஆகியவை குறித்த அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாடு மகாநாயக்க தேரர்கள், பேராயர் மற்றும் அகில ஜம்இய்யத்துல் உலமா சபை ஆகியோருக்கு முறைப்படி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று இந்து சமயத் தலைவர்களையும் விரைவில் சந்தித்து இது குறித்துக் கலந்துரையாடவுள்ளோம்” என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.




