சேனாநாயக்க சமுத்திரத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது குறித்து ஆராய்வு
மொனராகலை மாவட்ட மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் சேனாநாயக்க சமுத்திரப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் கள ஆய்வில் ஈடுபட்டு, மீனவ சங்க பிரதிநிதிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இந்தக் கலந்துரையாடலில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA), தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களும் பங்கேற்று, குறித்த பிரதேசத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மீன்வள நிலைமைகள் தொடர்பான விஞ்ஞான ரீதியான விளக்கங்களை வழங்கினர்.
இதன்போது, மீனவ சங்க பிரதிநிதிகள் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் போக்குவரத்து சிரமங்கள், மீன்பிடி நடவடிக்கைகளுக்கான அணுகல் வசதி இல்லாமை மற்றும் மீன்பிடித் துறைமுகம பற்றாக்குறையால் ஏற்படும் சவால்களை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதற்கு நிரந்தரத் தீர்வாக சேனாநாயக்க சமுத்திரப் பகுதியில் பொருத்தமான இடமொன்றில் மீன்பிடித் துறைமுகத்தை அமைத்துத் தருமாறு அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
இதையடுத்து கருத்து வெளியிட்ட தொழில்நுட்ப அதிகாரிகள், சேனாநாயக்க சமுத்திரம் பல்வேறு உள்நாட்டு மீனினங்களின் இனப்பெருக்கம் மற்றும் மீன் குஞ்சுகள் வளர்ச்சியடையும் முக்கிய உயிரியல் வாழ்விடமாக இருப்பதாக விளக்கமளித்தனர்.
அப்பகுதியில் நிரந்தர மீன்பிடித் துறைமுகம் அமைப்பதோ அல்லது அதிகளவிலான மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவதோ மீன்வள வளங்களை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞான மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், இலங்கையின் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான சேனாநாயக்க சமுத்திரத்தின் இயற்கை சமநிலையையும் நீரியல் உயிரினங்களின் வாழ்விடத்தையும் பாதுகாப்பது மிக முக்கியமான விடயமாகும் என்றும், மீன்வள வளங்களை நிலையான முறையில் பாதுகாப்பதன் மூலமே எதிர்கால தலைமுறைகளுக்கும் மீன்பிடித் தொழிலின் பயன்கள் உறுதிசெய்யப்பட முடியும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மீனவர்களின் கோரிக்கை பல ஆண்டுகளாக நிலவி வரும் நியாயமான பிரச்சினை என்பதை அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களின் பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மீன்வள வளங்களின் நிலைத்தன்மை மற்றும் மீனவர்களின் நலன் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் வகையில் நடைமுறைச் சாத்தியமுள்ள தீர்மானமொன்றை விரைவில் எடுக்க அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.




