காட்டுத்தீயால் திணறும் ஐரோப்பா – 80,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவு சேதம்
ஸ்பெயின் மற்றும் பிரான்சில் அதிகரித்து வரும் காட்டுத்தீயின் தீவிரத்திற்கு ஈடுகொடுக்க ஐரோப்பாவின் தீயணைப்புத் திறன் போராடி வருவதாகவும், தீயானது உள்ளூர் வளங்களை தொடர்ந்து திணறடித்து வருவதாகவும் ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினில் ஏற்கனவே 80,000 ஹெக்டேருக்கும் அதிகமாகவும், பிரான்சில் 42,000 ஹெக்டேருக்கும் அதிகமாகவும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்நிலையில் இந்தத் தீ விபத்துகள் கட்டுப்படுத்தும் திறனை மீறிவிட்டன,” என்று ஒரு ஆணைய அதிகாரி இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நெருக்கடியானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பெரிய அளவிலான பேரழிவுகளுக்குப் பதிலளிக்கும் அதன் திறன் ஆகியவற்றின் மீது அதிகரித்து வரும் அழுத்தத்தை எடுத்து காட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
சமீபத்தில் ஸ்பெயினில் ஏற்பட்ட ஒரு காட்டுத்தீயில், தீச்சுவாலைகள் மணிக்கு சுமார் ஆறு கிலோமீட்டர் வேகத்தில் பரவின. இது, மணிக்கு சுமார் 300 மீட்டர் வேகத்தில் மட்டுமே முன்னேறித் தீயைக் கட்டுப்படுத்த முடிந்த தரைப்படை தீயணைப்பு வீரர்களின் வேகத்தை விட மிக அதிகமாக இருந்தது.
தீ விபத்துகளுக்குப் பதிலளிப்பது மட்டுமே ஒரே தீர்வு அல்ல என்றும், பெருகிவரும் செலவுமிக்க அவசரகாலத் தலையீடுகளைச் சார்ந்திருப்பதை விட, பேரழிவுத் தீ விபத்துகளைத் தடுப்பதில் ஐரோப்பா மிக அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்றும் ஐரோப்பிய ஆணைய அதிகாரிகள் எடுத்துக் கூறியுள்ளனர்.




