இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணம் குறித்து தேரர் பரபரப்பு கருத்து
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உதவி வழங்கி வருவதன் பின்னணியில் பாரிய சூழ்ச்சிகள் இருக்கலாம் எனவும், எனவே கச்சத்தீவு மற்றும் வடக்கு மாகாணத்தைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்கள் அணிதிரள வேண்டும் எனவும் ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:
“இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை நாம் வரவேற்கின்றோம். எனினும், நாட்டில் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்காகவே அவர் வந்திருக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
அவரது இந்த விஜயத்தின்போது 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்களின் விவரங்களை அரசாங்கம் உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும். இவ்வாறான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் போது மக்கள் மௌனம் காப்பது ஏன்?
இந்தியாவில் பரந்த நிலப்பரப்பும் ஏழை மக்களும் வாழ்கின்றனர். அங்குள்ள அப்பாவி மக்களுக்கு ஒருவேளை உணவோ, குடிநீரோ கூட முறையாகக் கிடைப்பதில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, இந்தியா இலங்கைக்குத் தொடர்ந்து உதவுவதன் பின்னணியில் ஏதேனும் சூழ்ச்சி மறைந்திருக்கலாம்.
தமிழகத்தில் கச்சத்தீவை மீளப்பெறுவோம் எனக் கூறிய தேர்தல் பிரசாரங்களின் மத்தியிலேயே தளபதி விஜய் வெற்றிபெற்றார். எனவே, கச்சத்தீவையும், நாட்டின் வடக்கு எல்லையையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாப்பதற்குப் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
கையெழுத்திடப்பட்ட 3 ஒப்பந்தங்களையும் ஜனாதிபதி உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டே முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர, வெளிநாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப நாம் செயற்படக் கூடாது,” என சீலரத்ன தேரர் தெரிவித்தார்.




