வெடிபொருட்களுடன் ஊடுருவும் ஆளில்லா விமானங்கள் – ஜேர்மனி எடுத்த தீர்மானம்
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையம் ஒன்றில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து ஜெர்மனி தனது ஆளில்லா விமான எதிர்ப்பு காவல் பிரிவை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்தது.
இராணுவ உபகரணப் போக்குவரத்திற்கான முக்கிய மையமான லீப்ஜிக்-ஹாலே விமான நிலையத்தில், உக்ரேனிய சரக்கு விமானம் ஒன்றின் அருகே வெடிபொருட்கள் நிரப்பட்ட ஆளில்லா விமானம் கண்டறியப்பட்டது.
பின்னர் குறித்த விமானம் செயலிழக்கப்பட்டது. இந்த சம்பவம் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை, ஒரு “வெளிநாட்டு சக்தி” சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய “கலப்பினத் தாக்குதல் சூழ்நிலை” என்று உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட் ( Alexander Dobrindt) விவரித்துள்ளார்.
அத்துடன் தற்போது கூட்டாட்சி காவல் துறையின் ஆளில்லா விமான எதிர்ப்புப் பிரிவில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை 300 ஆக இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளார்.
அதேநேரம் இந்தப் பிரிவின் செயல்பாட்டுத் தளங்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து எட்டாக அதிகரிக்கப்படும் என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜெர்மன் விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு புதிய ஆளில்லா விமான தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை டோப்ரின்ட் அடுத்த வாரம் முறைப்படி திறந்து வைப்பார் என்றும் அவர் கூறினார்.




