டயானாவின் மரண செய்தி கேட்டு இளவரசர் மகிழ்ச்சியடைந்தாரா? சர்ச்சையை கிளப்பிய புத்தகம்
இளவரசி டயானாவின் மறைவு செய்திக் கேட்டு இளவரசர் சார்ளஸ் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை பங்கிங்ஹாம் அரண்மணை மறுத்துள்ளது.
டயானாவின் சகோதரர் ஸ்பென்சர் தனது சகோதரி குறித்து ஸ்வான் சாங் டயானா மை சிஸ்டர் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.
அடுத்த வாரம் வெளியாக உள்ள இந்த புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் வெளியாகி உள்ளது. அதில் டயானா மரணம் அடைந்த பிறகு மன்னர் சார்லசுடன் நடந்த உரையாடலை ஸ்பென்சர் குறிப்பிட்டு உள்ளார்.
இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, டயானாவின் மரணம் உறுதி செய்யப்பட்ட உடனேயே சார்லஸ் என்னுடன் பேசினார். அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்.
மறுமணம் செய்து கொள்வதற்கான புதிய சுதந்திரம் கிடைத்த உணர்வே அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். அவர் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தார். ஒரு லாட்டரி வென்றவரைப் போல அவர் பேசினார் என்று அப்போது நான் நினைத்தது எனக்கு நினைவிருக்கிறது.
டயானாவின் இறுதி ஊர்வலத்தில் அவரது மகன்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் நடந்து செல்வது குறித்து, எனக்கும் சார்லசுக்கும் இடையே காரசாரமான தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
ஒரு சிறுவன் தன் தாயின் உடலுக்குப் பின்னால் நடந்து செல்வது எவ்வளவு பெரிய மன அதிர்ச்சியைத் தரும்? அது மிகவும் மோசமான ஒன்று. எனவே அதைத் தடுக்க நான் முயற்சித்தேன்.
டயானா தனது மகன்கள் இதுபோன்ற கடினமான சூழலுக்கு ஆளாவதை விரும்ப மாட்டார் என்று நான் கூறினேன். அதற்கு சார்லஸ், கவலைப்பட வேண்டாம். நாங்கள் அவரை விரைவில் மறந்து விடுவோம் என்றார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த உரையாடலில் சார்லஸ் தனது கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். டயானா மீது தனக்குள்ளே அடக்கி வைத்திருந்த அவமதிப்பு உணர்வையும், அவரது மறைவால் உலகம் அடைந்த பெரும் அதிர்ச்சியைக் கண்டு தனக்கு ஏற்பட்ட வெறுப்பையும் அவர் கொட்டித் தீர்த்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னர் சார்லஸ் குறித்து ஸ்பென்சர் தெரிவித்து உள்ள குற்றச்சாட்டுகளை பக்கிங்காம் அரண்மனை திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
இதுதொடர்பாக அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், கொள்கை ரீதியாகப் புத்தகங்கள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என்றாலும், சகோதர இழப்பால் ஏற்படும் துயரம் என்பது பகுத்தறிவை மங்கச் செய்து, முடிவெடுக்கும் திறனைப் பாதித்து, மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில் நினைவுகளை மாற்றியமைக்கவும் கூடும் என்பதை மன்னர் நன்கு அறிவார்.
இது பல ஆண்டுகள் கடந்த பிறகும் கூட நிகழலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மன்னர் சார்லஸ் கடந்த 2005-ம் ஆண்டு கமிலா பார்க்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




