வெளிநாட்டுப் பயணத்துக்கு காத்திருக்கும் கோட்டாபய: நவம்பர் 25 தீர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவது தொடர்பான கோரிக்கை மீதான தீர்மானத்தை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் இணைந்தே கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (04) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வெளிநாடு சென்ற பின்னர் கோட்டாபய ராஜபக்சஷ மீண்டும் இலங்கைக்குத் திரும்புவாரா என்பது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எனினும், வெளிநாடு சென்ற பின்னர் அவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதை உறுதிப்படுத்துவதற்கான உரிய சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டால், பயணத் தடையை நீக்குவதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறான சட்ட ஏற்பாடுகள் இல்லாவிட்டால், அவரது வெளிநாட்டுப் பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி குறித்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்படாத நிலையில், அவர் வெளிநாடு சென்ற பின்னர் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதை உறுதிப்படுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என நீதவான் பசன் அமரசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, பயணத் தடையை நீக்குவது தொடர்பான கோரிக்கை மீதான தீர்மானத்தை நவம்பர் 25ஆம் திகதி அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




