திலீபனுக்கு யாழில் வெண்கலச் சிலை: விமல் கடும் எதிர்ப்பு
“தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் வெண்கலச் சிலை வைத்த தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்படாமல் இருப்பது ஏன்?
தமிழ் பிரிவினைவாத புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கேற்ப இந்த அரசாங்கம் செயற்படுகிறதா?” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“திலீபன் புலிகள் அமைப்பின் ஆயுதப் பிரிவில் இருந்தவர். இராணுவத்துடனான மோதலில் காயமடைந்த பின்னரே அவர் அரசியல் பிரிவிற்கு வந்தார். சிங்கள மக்கள் வடக்கு, கிழக்கில் குடியேறுவதைத் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பிரிவினைவாதக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தே அவர் உயிரிழந்தார்.
புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். எனவே, புலிகள் அமைப்பின் சின்னங்கள், இலச்சினைகளைப் பயன்படுத்துவதும் அவ்வமைப்பைப் பற்றிப் பரப்புரை செய்வதும் சட்டவிரோதமான நடவடிக்கைகளாகும்.
ஆனால், திலீபனுக்கு மலரஞ்சலி செலுத்தப்படுகின்றது; அவரின் புகழ்பாடும் பாடல்கள் ஒலிக்கச் செய்யப்படுகின்றன. சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால், சட்டத்தை மீறும் தமிழ் தீவிரவாதிகளுக்கு எதிராகச் சட்டம் செயற்படாமல் இருப்பது ஏன்? போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர்களைச் சிறையில் அடைக்க மட்டும்தான் நாட்டில் சட்டம் உள்ளதா?
மேலும், இந்நிகழ்வில் தமிழ் பாடசாலை மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். பாடசாலை சீருடையுடன் இத்தகைய நிகழ்வில் பங்கேற்பதற்கு அதிபரின் அனுமதி அவசியமாகும். அப்படியானால், இது அரசாங்கத்தின் அனுசரணையுடன்தான் நடைபெறுகிறதா?” என்று விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.




