இந்தியாவுக்கு 100 சதவீத வரி: கையெழுத்திட்டார் ட்ரம்ப் ட்ரம்ப்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி (Tariff) விதிக்க வழிவகுக்கும் ரஷ்ய தடைகள் தொடர்பான சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குப் புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
குடியரசுக் கட்சி பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையில் இச்சட்டமூலம் 262 – 159 என்ற வாக்குகள் கணக்கில் நிறைவேற்றப்பட்ட இரண்டு நாட்களில் டிரம்பின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
வாஷிங்டனில் உக்ரைனின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த செனட்டர் லிண்ட்சே கிரகாமின் நினைவாக, இச்சட்டத்திற்கு ‘லிண்ட்சே ஓ கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ (Lindsey O Graham Sanctioning Russia and Iran Act of 2026) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கிய்வ் நகருக்கான பயணத்தை முடித்துத் திரும்பிய சிறிது நேரத்திலேயே, இந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதிநிதிகள் சபையின் நிதி மற்றும் வரி வழிமுறைகளுக்கானக் குழுவின் (House Ways and Means Committee) கூற்றுப்படி, இச்சட்டம் ரஷ்யப் பொருட்களுக்கு 500 சதவீதம் வரை வரி விதிக்க வழிசெய்கிறது.
மேலும், ரஷ்ய ஆற்றல் வளங்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகள் மற்றும் எண்ணெய் தடைகளைத் தவிர்க்க உதவும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரிகளை விதிக்கவும் இச்சட்டம் வழிவகுக்கிறது.
கூடுதலாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ரஷ்ய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எதிரான தடைகளும் இச்சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மீதான தாக்கம்
டிரம்ப் ரஷ்ய தடைகள் சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியா புதிய வரி அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெனி ஹோயர் அறிமுகப்படுத்திய திருத்தம் ஒன்றில், சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, சிங்கப்பூர், அஜர்பைஜான், கஜகஸ்தான், ஹங்கேரி, கிர்கிஸ்தான் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய 10 நாடுகளின் பெயர்களை நேரடியாகக் குறிப்பிட்டு, இச்சட்டத்தின் இரண்டாம் நிலை வரி விதிப்புகளின் கீழ் 100 சதவீதம் வரை வரிகளைப் பெறத் தகுதியுடைய நாடுகளாக வகைப்படுத்தக் கோரப்பட்டது.
இருப்பினும், இந்தத் திருத்தம் உடனடியாக இந்தியாவின் மீது 100 சதவீத வரியைச் சுமத்தவில்லை.
ஜனாதிபதி டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்பினால் மட்டுமே இந்தியாவின் மீது இந்த வரிகள் விதிக்கப்படலாம்.
அதிபர் டிரம்ப் இந்தியாவின் மீது 100 சதவீத வரியை விதித்தால், கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அபராதமாக, புதுடெல்லியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா தற்போது விதிக்கும் 10 சதவீத வரியுடன் இது கூடுதலாகச் சேரும்.
இருப்பினும், இந்திய ஏற்றுமதிகள் மீதான இந்த புதிய வரிகளின் துல்லியமான தாக்கத்தை அமெரிக்கா வரி விகிதங்களை அறிவித்த பின்னரே மதிப்பிட முடியும்.
இந்தியாவின் பதில் நடவடிக்கை
அமெரிக்கக் காங்கிரஸ் இந்த ரஷ்ய தடைகள் சட்டமூலத்தை நிறைவேற்றிய புதன்கிழமையன்று, தனது வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உறுதியுடன் இருப்பதாக இந்தியா தெளிவுபடுத்தியது.




