ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தது பிரித்தானியா!
ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஆட்கடத்தல் செய்து போரில் ஈடுபடுத்தும் ரஷ்ய வலையமைப்பு கும்பல்களை இலக்காகக் கொண்டு பிரித்தானியா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்த வலையமைப்புகள், நைஜீரியா, சிரியா மற்றும் யேமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தனிநபர்களைப் பொய்யான வாக்குறுதிகள் மூலம் கவர்ந்து, பின்னர் அவர்களை உக்ரைனில் உள்ள போர்க்களங்களுக்கு அனுப்புவதாகக் கூறப்படுகிறது.
ரஷ்ய ட்ரோன் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து மக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறான மோசடிகளை செய்யும் சுமார் 35 நிறுவனங்கள், தனி நபர்கள் மீது பிரித்தானியா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இதற்கமைய பொலினா அசர்னிக் மற்றும் எலெனா ஸ்மிர்னோவா போன்ற தனிநபர்களும், சீன மற்றும் தாய்லாந்து நிறுவனங்கள் உட்பட ட்ரோன் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் மேற்படி தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
2022-ஆம் ஆண்டு முதல் ரஷ்யா குறைந்தது 27,000 வெளிநாட்டுப் போராளிகளை ஆட்சேர்ப்பு செய்துள்ளதாகவும், அவர்களில் பலர் மோசமான சூழ்நிலைகளில் அவதிப்படுவதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.





