ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவாருங்கள்: ட்ரம்பிடம் அவசர கோரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருக்கிடையில் அவசர தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அண்மையில் அறிவித்த பரவலான வரி உயர்விலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனது கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் உறுதியளித்துள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசி தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஈரானிய பெண் கால்பந்து வீராங்கனைகளின் எதிர்காலம் குறித்து நள்ளிரவில் இரு தலைவர்களும் உரையாடியதற்குப் பிறகு, தற்போது மீண்டும் இந்தத் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாகப் பிரதமர் அந்தோனி அல்பானீசி இன்று காலை அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்அமைந்ததாகக் கூறினார்.
ஈரான் போர், AUKUS மற்றும் பசிபிக் பிராந்தியம் குறித்த பேச்சுவார்த்தை
இந்த உரையாடலின் போது ஈரான் போர் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது, மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஆஸ்திரேலியாவின் கோரிக்கையை அல்பானீசி மீண்டும் வலியுறுத்தினார்.
ஈரானில் தெளிவான வெளியேற்ற திட்டம் எதுவும் இன்றி அமெரிக்கா தற்போது சிக்கலில் மாட்டியுள்ளதாகவும், ஹோர்முஸ் ஜலசந்தி மீதான தெஹ்ரானின் பிடி குறித்த பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதாகவும் பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ‘ஏயூகஸ்’ (AUKUS) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் “முழு வீச்சில் தொடர்ந்து செயல்படும்” என்பதில் இரு தலைவர்களும் உடன்பட்டனர்.




