சிறைச்சாலை கலவரங்களின் பின்னணி என்ன? விசாரணை வேட்டை தீவிரம்
சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் சூழ்ச்சி மற்றும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும், இதனைச் சாதாரண விடயமாகக் கருதாமல் முழுமையான விசாரணை வேட்டை நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பும், சட்டம் மற்றும் ஒழுங்கும் முழுமையாக உறுதிப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தவை வருமாறு:
“நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலையடுத்து மஹர சிறைச்சாலையிலும் குழப்பம் ஏற்பட்டது. அதேபோல மகசின் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரவு அமைதியின்மை ஏற்பட்டது. நேற்று காலை குருவிட்ட சிறைச்சாலையிலும், அதனைத் தொடர்ந்து பள்ளன்சேன சிறைச்சாலையிலும் அசாதாரண சூழ்நிலை உருவாகியது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பமான இந்த மோதல் நிலை பள்ளன்சேன வரை வியாபித்துள்ளது.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற உளவுத் தகவல்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் பிரகாரம், இதன் பின்னணியில் சூழ்ச்சி மற்றும் திட்டமிட்ட சதிச் செயல்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். குருவிட்ட சிறைச்சாலையில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்து இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பள்ளன்சேன சிறைச்சாலையில் 30 கைதிகள் சிறைக்கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை உணவுக்காக வெளியே வந்த கைதிகள் மீண்டும் சிறைக் கூண்டுகளுக்குள் செல்ல மறுத்தமையினாலேயே அங்கு குழப்பம் ஏற்பட்டது.
ஏனைய சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பள்ளன்சேன சிறைச்சாலையின் நிலைமையும் இன்னும் சில நிமிடங்களில் சீரடைந்துவிடும்.
இந்தச் சம்பவங்கள் திட்டமிட்ட அடிப்படையில் செய்யப்பட்ட சூழ்ச்சி போல் தெரிகிறது. இருப்பினும், விரிவான விசாரணைகளின் பின்னரே அது பற்றி உறுதியாகத் தெரியவரும்.
இது தேசிய பாதுகாப்புக்குப் பெரியளவில் தாக்கம் செலுத்தும் பிரச்சினை இல்லை என்ற போதிலும், நாம் இது குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” எனக் கூறினார்.




