ஆஸ்திரேலிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மீது கார் மோதித் தாக்குதல்; கால் அகற்றம்
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது காரை மோதச் செய்து, பின்னர் மீண்டும் பின்னோக்கிச் செலுத்தி இரண்டாவது முறையாக மோதிய சம்பவத்தில், அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான ஹெலன் ஹெய்ன்ஸ், திங்கட்கிழமை மெல்போர்ன்க்கு வடக்கே அமைந்துள்ள சிறிய கிராமப்புற நகரமான வங்கரட்டாவில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, இரவு முழுவதும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயங்கள் காரணமாக ஹெலன் ஹெய்ன்ஸின் ஒரு கால் அகற்றப்பட்டுள்ளதாகவும், மற்றொரு காலைக் காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சித்து வருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
“தற்போதைய நிலையில், இது தனிப்பட்ட சம்பவமாகவே தோன்றுகிறது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய வேறு எந்த அச்சுறுத்தல்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை” என்று விக்டோரியா மாநிலப் பொலிஸார் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கான நோக்கம் இதுவரை வெளிப்படுத்தப்படாத நிலையில், நாட்டில் நிலவும் கடுமையான மற்றும் பிளவுபட்ட அரசியல் விவாதச் சூழலுடன் இந்தச் சம்பவத்தைப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தொடர்புபடுத்தியுள்ளார்.
“இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது விபத்தல்ல. யாரோ ஒருவர் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் சறுக்கிச் சென்ற சம்பவமும் அல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, ஹெலன் ஹெய்ன்ஸ் தனது காரின் பின்புறப் பகுதியில் பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது அல்லது இறக்கிக்கொண்டிருந்தபோது அந்தக் கார் அவர் மீது மோதியிருக்கலாம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 43 வயதுடைய நபர், சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி கடுமையான காயத்தை ஏற்படுத்தியமை, வேண்டுமென்றே கடுமையான காயத்தை ஏற்படுத்தியமை மற்றும் பொது அதிகாரியொருவருக்குத் தீங்கு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் செவ்வாய்க்கிழமை சுமத்தப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார், பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அமைப்பினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தத் தாக்குதல் குறிப்பிட்ட ஒருவரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாகத் தாம் குற்றஞ்சாட்டவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெலன் ஹெய்ன்ஸ், நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னர் தாதியர் மற்றும் மருத்துவச்சிப் பணிகளில் ஈடுபட்டதுடன், கல்வித்துறையிலும் பணியாற்றியுள்ளார். 2019ஆம் ஆண்டு இண்டி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவான அவர், 2022 மற்றும் 2025ஆம் ஆண்டுகளிலும் அந்தத் தொகுதியில் வெற்றிபெற்று தனது பதவியைத் தக்கவைத்துக்கொண்டார்.




