மெல்போர்ன் பாதுகாப்பு நிறுவனம் மீது பயங்கரவாதத் தாக்குதல்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பாதுகாப்புத் துறை தொடர்பான உற்பத்தி நிறுவனம் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல், பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஈடுபட்டவர்கள் பாலஸ்தீன ஆதரவு நோக்கங்களைக் கொண்டிருந்ததாகப் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த ஜூலை 5-ஆம் திகதி அதிகாலை, ‘லவிட் டெக்னாலஜிஸ்’ (Lovitt Technologies) என்ற இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள், மூன்று வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன் கட்டிடத்திலும் சுவரோவியங்களை (Graffiti) வரைந்து சென்றனர்.
ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸ் (AFP), விக்டோரியா பொலிஸ் மற்றும் ASIO ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய விக்டோரியா கூட்டுப் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு (JCTT), இந்தச் சம்பவத்தின் பின்னணியில் “அராஜகவாத மற்றும் புரட்சிகர சித்தாந்தங்களைக் கொண்ட தீவிர இடதுசாரி ஆர்வலர்கள்” உள்ளார்களா என்பது குறித்து ஆராய்ந்து, சந்தேக நபர்களின் படங்களை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புப் படையின் விநியோகச் சங்கிலியுடன் (Defence Force Supply Chain) தொடர்புடைய நிறுவனம் என்பதால், இந்த இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், இணையத்தில் வெளியான காணொளி மூலம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றக் குழுவினர், இதுபோன்ற தாக்குதல்களை எவ்வாறு நடத்துவது என்றும் விளக்கியுள்ளனர்.
சந்தேக நபர்கள் “பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்” என்றும், இந்த நிறுவனம் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதி என நம்பியதால் அதனை இலக்கு வைத்ததாகவும் JCTT தெரிவித்துள்ளது.
AFP வெளியிட்ட படங்களில், சந்தேக நபர் ஒருவர் கருப்பு ஆடை அணிந்து பாலஸ்தீனக் கொடிக்கு முன்னால் நிற்பது போன்றும், பின்னணியில் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் கொடிகள் இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு, ‘ஜாயிண்ட் ஸ்டிரைக் ஃபைட்டர்’ (Joint Strike Fighter) திட்டத்தில் தனது பணிகளைத் தொடர ‘லவிட்’ நிறுவனம் 1.5 மில்லியன் டாலர் மானியத்தைப் பெற்றது. இது அமெரிக்கா தலைமையிலான எப்-35 (F-35) போர் விமானத் தயாரிப்புத் திட்டமாகும், இதில் இஸ்ரேல் ஒரு முக்கியப் பயனாளியாகும்.
அக்டோபர் 7 சம்பவத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு நடத்தப்படும் முதல் பயங்கரவாத விசாரணை இதுவாகும் என JCTT உறுதிப்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸ் அதிகாரி அந்தோணி ஹோல் கூறுகையில், “சமூகத்தில் அச்சத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்த முயலும் தீவிரவாத சித்தாந்தங்களால் தூண்டப்படும் பயங்கரவாத செயல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது,” எனத் தெரிவித்துள்ளார்.




