அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு
அசாம் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது.
அசாமில் வெள்ளத்தில் சிக்கி சிவசாகர் மாவட்டத்தில் இருவர் மற்றும் கோலாகாட்டில் ஒருவர் என நேற்று மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 78-ஐ எட்டியுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) தெரிவித்துள்ளது.
அரசு அறிக்கையின்படி, சிவசாகர், சாரைடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நாகான், பிஸ்வநாத் மற்றும் காம்ரூப் ஆகிய ஏழு மாவட்டங்களில் மொத்தம் 3,00,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 551 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், 21,523 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. சாரைடியோ மாவட்டத்தில் அதிகபட்சமாக 1.37 லட்சத்துக்கும் அதிகமான மக்களும், சிவசாகரில் 84,600 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 16,500-க்கும் மேற்பட்ட மக்கள் 71 நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். 72,000-க்கும் மேற்பட்டோருக்கு 30 நிவாரண விநியோக மையங்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வெள்ளத்தில் 11,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், 17,000 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் தொலைபேசியில் பேசி வெள்ள நிலைமை குறித்துக் கேட்டறிந்தார். மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தற்போது வெள்ள நீர் வடிந்து வரும் நிலையிலும், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.




