மன்னாரில் இராணுவ வாகனம் விபத்து: சிப்பாய் பலி; 11 பேர் காயம்
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் இராணுவத்தின் டிபென்டர் வாகனம் பனை மரத்துடன் மோதியதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சனிக்கிழமை (ஒக்டோபர் 24) கிளியன்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தலைமன்னாரிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த இராணுவ வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பனை மரத்துடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தில் பயணித்த 12 இராணுவச் சிப்பாய்களும் காயமடைந்த நிலையில், பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, சிப்பாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏனைய 11 பேரும் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மன்னாருக்குச் சென்றிருந்த சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, காயமடைந்த இராணுவச் சிப்பாய்களைப் பார்வையிடுவதற்காக வைத்தியசாலைகளுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் இராணுவத்தின் டிபென்டர் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.




