திருகோணமலை மாவட்ட மீனவர்கள் பிரச்சினை குறித்து ஆராய்வு
திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில் துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக அடையாளம் கண்டு, அவற்றுக்கு துறைசார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கம் எனத் தெரிவித்தார்.
மேலும், மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடைய பிரச்சினைகள் நீண்டகாலம் தீர்வின்றி தொடராமல், அவற்றின் முன்னேற்றத்தை முறையாகக் கண்காணித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதன்போது, கடந்த மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.
குறிப்பாக எரக்கண்டி களப்பு பகுதியில் மீன்பிடி மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்தல், தென்னமரவாடி துறைமுகம் மற்றும் லங்காபட்டுன பகுதிகளுக்கான புதிய பொலிஸ் காவல்நிலையங்கள் அமைத்தல், துறைமுகப் பகுதிகளில் மீன்பிடிப் படகுகளைப் பதிவு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அதேபோன்று, புல்மோட்டை பிரதேச மீனவர்களின் மாடி வலை மீன்பிடி நடவடிக்கைகள், குறிப்பிட்ட தூர எல்லைக்குள் சிறிய படகுகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதி, பலநாள் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தும் மீனவர்களின் ஆவண மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன.
மீனவர்கள் தங்களது ஆவணங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை காரணமாக ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த சேவை மையமொன்றை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துதல், மீன்பிடி இறங்குதுறை அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், இக்பால் நகர் மீன்பிடி இறங்குதுறை காணிப் பிரச்சினை, கோட்பே மீன்பிடித் துறைமுகப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள், NAQDA நிறுவனத்தில் மீன்பிடிப் பரிசோதகர்கள் மற்றும் பௌதிக வளங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
சுற்றுலா வலயங்களில் மீன்பிடிப் படகுகளை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத்துறைக்கும் மீன்பிடித்துறைக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளை அடையாளம் கண்டு, இரு துறைகளினதும் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.





