அமெரிக்கா நிச்சயம் அழிந்துபோகும்; நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ள ஹமாஸ் !
இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையேயான சண்டை தொடரும் நிலையில், ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் நேரடியாக அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் 7ம் திகதி இஸ்ரேலைக் குறிவைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதலை நடத்தினர். முதலில் 20 நிமிடங்களில் பல ஆயிரம் ஏவுகணைகளை வீசிய அவர்கள், தொடர்ந்து இஸ்ரேலுக்குள் நுழைந்தும் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர். இதில் பலர் உயிரிழந்தனர்.இதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியது. காசா மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும், காசா மீதான தரைவழியாகத் தாக்குதல்களையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் தொடரும் நிலையில், ஹமாஸின் மூத்த தளபதிகளில் ஒருவரான அலி பராக்கா நேரடியாக அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த காலங்களில் சோவியத் ஒன்றியம் எப்படி அழிந்து போனதோ.. அதேபோல அமெரிக்காவும் நிச்சயம் ஒரு நாள் அழியும் எனறு அவர் எச்சரித்துள்ளார். கடந்த நவம்பர் 2ம் திகதி லெபனான் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அலி பராக்கா இந்த கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.
அவர் அந்த பேட்டியில், “அமெரிக்கா என்பது பிரிட்டன் மற்றும் உலகளாவிய ஃப்ரீமேசன்ரி இணைந்து உருவாக்கப்பட்டதுதான். அது சோவியத் ஒன்றியம் செய்தது போல் நிச்சயம் வீழ்ந்துவிடும். அமெரிக்காவின் அனைத்து எதிரிகளும் ஆலோசனையில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அனைவரும் நெருங்கி வருகிறார்கள். அவர்கள் போரில் ஒன்றாகச் சேரும் நாள் விரைவில் வரலாம். அப்போது அமெரிக்கா என்பது கடந்த காலமாக மாறும்.
அப்போது அமெரிக்கா சக்திவாய்ந்ததாக இருக்காது.. இப்போதே பார்த்தீர்கள் என்றால் அமெரிக்காவை வட கொரியா மிகவும் சூப்பராக கையாண்டு வருகிறது. இப்போது இருக்கும் உலக தலைவர்களிலேயே அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட தலைவர் என்றால் அது வட கொரியா தலைவர் ஒருவர் மட்டுமே. இது உங்களுக்கே தெரியும். அமெரிக்காவைத் தாக்கும் ஆயுதங்களும் வட கொரியாவிடம் உள்ளது. இந்த மோதலில் வட கொரியா தலையிடும் நாள் விரைவில் வரலாம், ஏனென்றால் வடகொரியாவும் எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறது.
எங்கள் ஹமாஸ் குழு சமீபத்தில் தான் ரஷ்யாவுக்குச் சென்றது. இன்று ரஷ்யாவுக்கும் எங்களுக்கும் இடையே தினசரி ஆலோசனை தொடர்ந்து நடக்கிறது. சீனா மற்றும் ரஷ்யா பிரதிநிதிகள் ஹமாஸ் தலைவர்களைச் சந்தித்தனர். அதேபோல ஹமாஸ் பிரதிநிதிகள் மாஸ்கோவிற்கு பயணம் செய்தனர். அடுத்த கட்டமாக ஒரு தூதுக்குழு சீனாவுக்கும் செல்ல உள்ளது.
அமெரிக்காவைத் தாக்கும் திறன் ஈரானுக்கு இல்லை. ஈரான் இந்த விவகாரத்தில் தலையிட முடிவு செய்தால், அப்பகுதியில் இருக்கும் அமெரிக்கத் தளங்களையும் மட்டுமே அவர்களால் தாக்க முடியும். அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஆயுதங்கள் ஈரானிடம் இல்லை. அதேநேரம் அமெரிக்காவால் இஸ்ரேலையும், அப்பகுதியில் உள்ள தளங்களையும் கப்பல்களையும் தாக்க முடியும் என்பது உண்மைதான்” என்று அவர் கூறினார். மேலும், இப்போது நடந்து வரும் மோதல் எப்படிச் சென்றாலும் அதைச் சமாளிக்க ஹமாஸ் தயாராக இருப்பதாகவும், அதற்கேற்ப தாங்கள் திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஹமாஸ் வசம் அமெரிக்கர்கள் உட்படப் பல பிணையக் கைதிகள் இருக்கும் நிலையில், அவர்கள் குறித்து ஹமாஸ் தளபதி எந்தவொரு கருத்தையும் பகிரவில்லை.