‘ஜுராசிக் பார்க்’ நாயகன் சாம் நெய்ல் காலமானார்
‘மை பிரில்லியன்ட் கரியர்’ (My Brilliant Career) மற்றும் ‘ஜுராசிக் பார்க்’ (Jurassic Park) ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), தனது 78 ஆவது வயதில் காலமானார்.
ஆஸ்திரேலியா, சிட்னியில் வைத்தே அவர் உயிரிழந்துள்ளார்.
நெய்ல் முதன்முதலில் 1977 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்லீப்பிங் டாக்ஸ்’ (Sleeping Dogs) திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து மை பிரில்லியன்ட் கரியர், ஜுராசிக் பார்க், தி பியானோ (The Piano), தி டிஷ் (The Dish) மற்றும் பொசஷன் (Possession) உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
1970களின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியத் திரைப்படத் துறையில் ஏற்பட்ட பெரும் எழுச்சியைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் பட்டியலில் இவரும் ஒருவராவார்.
இந்த வரிசையில் பால் ஹோகன், மெல் கிப்சன், ஜியோஃப்ரி ரஷ், ரஸ்ஸல் குரோவ், ஜேன் கேம்பியன், பீட்டர் வீர் மற்றும் ஜில்லியன் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் அடங்குவர்.
கடந்த 2023 ஆம் ஆண்டில், தனக்கு 2022 இன் தொடக்கத்தில் இரத்தப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்ததை நெய்ல் வெளிப்படுத்தியிருந்தார்.
ஒரு அரிய புற்றுநோய் எதிர்ப்பு மருந்து வேலை செய்ததைத் தொடர்ந்து, அதே ஆண்டின் பிற்பகுதியில் அவர் புற்றுநோயின் தீவிரத்திலிருந்து மீண்டார் . இருப்பினும், அவருக்குத் தொடர்ந்து மருந்து உட்செலுத்தும் சிகிச்சைகள் தேவைப்பட்டன.
தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதத்தில், தான் முற்றிலும் புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.
அத்துடன், இந்த நடிகர் 2022 ஆம் ஆண்டில் நைட்ஹுட் (Knighthood) பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார், இதன் மூலம் அவர் ‘சர் சாம் நெய்ல்’ (Sir Sam Neill) ஆனார்.
நடிகர் சாம் நெய்லின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், “நெய்ல் ஆஸ்திரேலியர்களின் இதயங்களில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்,” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.




