அமெரிக்க, இந்திய வர்த்தக உறவில் புதிய திருப்பம்
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம், இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை (20) ஊடகவியலாளர்களைச் சந்தித்த ட்ரம்ப்பிடம், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், “அவர்கள் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள விரும்புகின்றனர். நாங்களும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்யவுள்ளோம். ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது கடந்த காலங்களில் நாம் செய்த ஒப்பந்தங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவும் இந்தியாவும் கடந்த பெப்ரவரி மாதம் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்டத்துக்கான கட்டமைப்பை இறுதி செய்திருந்தன. எனினும், அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் மேலதிக பேச்சுவார்த்தைகள் அவசியமாகியுள்ளன.




