இந்தியா, நியூசிலாந்து வர்த்தக உறவில் புதிய மைல்கல்: FTA அமுல்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இன்று ( 20) முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவிலிருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் சுங்க வரியில்லா சந்தை அணுகல் கிடைக்கவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு நியூசிலாந்து 100 சதவீத வரிச் சலுகையை வழங்குகிறது. இதனால், ஆடைகள், ஜவுளி, தோல் பொருட்கள், காலணிகள், இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் நன்மையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, நியூசிலாந்திலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 95 சதவீதத்துக்கான வரிச்சலுகைகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. எனினும், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட முக்கியமான சில பொருட்களைப் பாதுகாப்பதற்காக இந்தியா அவற்றுக்கு வரிச்சலுகை வழங்குவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை மேற்கொள்ள வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக நியூசிலாந்து உறுதியளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 7 பில்லியன் நியூசிலாந்து டொலர்களாக (சுமார் 35,000 கோடி இந்திய ரூபா ) அதிகரிப்பதும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.




