இந்தியா செய்தி

புலிகள் அமைப்பை மீளுருவாக்க சதி: இலங்கைப் பிரஜைக்கு இந்திய நீதிமன்றம் பிணை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்குவதற்காக நிதி திரட்டுதல் மற்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான முஹம்மது அஸ்மினுக்கு இந்தியாவின் கேரள உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்குவதற்காக நிதி திரட்டுதல் மற்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான முஹம்மது அஸ்மினுக்கு இந்தியாவின் கேரள உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தேசிய புலனாய்வு முகமையின் (NIA) சிறப்பு நீதிமன்றம் அஸ்மினுக்கு மன்னிப்பு வழங்கி, அரசுத் தரப்பு சாட்சியாக மாறி விசாரணைக்கு ஒத்துழைக்க அவர் இணங்கியுள்ள நிலையில், தொடர்ந்து அவரைச் சிறையில் வைத்திருப்பது நியாயமானதல்ல என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், அவர் ஏற்கனவே சிறையில் கழித்த காலம் மற்றும் இதே வழக்குடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கப்பட்டமை ஆகியவற்றையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது.

இதன்படி, அஸ்மினை கேரள சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கும், அவருக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேரள உள்துறை அமைச்சுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஒரு இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான தனிப்பட்ட பிணையுடன், அதே தொகைக்கு இரு உத்தரவாததாரர்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடவுச்சீட்டை ஒப்படைப்பதுடன், வசிப்பிட முகவரி மற்றும் தற்போதைய தொலைபேசி இலக்கத்தையும் தேசிய புலனாய்வு முகமைக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சிறப்பு நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும், ஒவ்வொரு சனிக்கிழமையும் விசாரணை அதிகாரியிடம் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் ஏனைய சந்தேகநபர்களுடன் தொடர்புகொள்ளவும், அரசுத் தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களில் தலையிடவும், ஊடகங்களுடன் தொடர்புகொள்ளவும், வழக்கு தொடர்பாகப் பகிரங்கக் கருத்துகளை வெளியிடவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தப் பிணை உத்தரவு இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்கான உரிமையை வழங்காது என்றும், அவரது குடிவரவு நிலை தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்குத் தடையாக அமையாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தேசிய புலனாய்வு முகமையின் குற்றச்சாட்டுகளின்படி, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இயங்கும் சர்வதேச குற்ற வலையமைப்புகளுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களுடன் இணைந்து அஸ்மின் செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதக் கொள்வனவு மற்றும் சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்கள் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்குவதற்கான நிதி மற்றும் ஏற்பாடுகளைச் செய்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் பரிமாற்றங்களுக்கு உதவியமை, ஹவாலா முறையின் ஊடாக சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டமை மற்றும் குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி