சீனாவும் ஐரோப்பாவும் வர்த்தக போர்களில் ஈடுபடக் கூடாது – வாங் வலியுறுத்து
சீனாவும் ஐரோப்பாவும் விரிவான மூலோபாய கூட்டாளிகள் என்பதால், வர்த்தகப் போர்களில் ஈடுபடக்கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வாடேஃபுல்லிடம் Johann Wadephul தொலைபேசி உரையாடலில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள வாங், பரஸ்பரம் நன்மை பயக்கும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இரு தரப்பினரின் நலன்களுக்கும் உகந்தது மற்றும் அதுவே “சரியான தேர்வு” என்று கூறியுள்ளார்.
அத்துடன் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் நெருங்கி, உரையாடல் மற்றும் கலந்தாலோசனை மூலம் ஒருவருக்கொருவரின் கவலைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் “ஜெர்மனி பகுத்தறிவு மற்றும் நடைமுறை அணுகுமுறையைப் பின்பற்றி, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒரு நேர்மறையான பங்கை வகித்து, தடையற்ற வர்த்தகத்தை நிலைநிறுத்துவதை ஊக்குவித்து, பாதுகாப்புவாதத்தை நிராகரிக்கும் என்று சீனா நம்புவதாக வாங் கூறியுள்ளார்.




