தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு!
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவும், ரஜீவர்மனின் 19 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வும் யாழ் ஊடக அமையத்தில் நேற்று (28) இடம்பெற்றது.
யாழ் ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளரும் யாழ்.ஊடக அமையத்தின் ஸ்தாபகருமான ரட்ணம் தயாபரன் சிவராமின் திருவுருவப் படத்துக்கும், ரஜீவர்மனின் திருவுருவப்படத்துக்கு யாழ்.ஊடக அமையத்தின் பொருளாளரும் தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியருமான கம்சனும் மலர் மாலைகளை அணிவித்தனர்.
பொதுச் சுடரினை ஊடக செயற்பாட்டாளர் புவனேந்திரனும், ஊடகவியலாளர் சபேசும் ஏற்றி வைத்தனர்.
ஊடகவியலாளர் சிவராம் கடந்த 2005 ஏப்ரல் 28 ஆம் திகதி பாதுகாப்பு மிகுந்த இலங்கையின் தலைநகரான கொழும்பில் நாடாளுமன்றத்திற்கு அருகில் வைத்துக் கடத்தப்பட்டுச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

ஊடகவியலாளர் ரஜீவர்மன் 2007 ஏப்ரல் 29 ஆம் திகதி யாழ்.நகர்ப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இரு ஊடகவியலாளர்களின் படுகொலைகள் அரச படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அரசுகள் மாறினாலும் இந்த ஊடகவியலாளரான இருவருக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.





