இந்திய போராட்டம்: உள்நாட்டு விவகாரம் – அமெரிக்கா தலையிடாது
இந்தியாவில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகப்படியான பலப்பிரயோகம் பயன்படுத்தப்படுவதாக ஐ.நா. நிபுணர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ விமர்சித்துள்ளார்.
“ஐ.நா. நிபுணர்கள் என்ற சொல்லே முரண்பாடானது” எனக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் போராட்டங்கள் அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் விவகாரம் என்றும், அதில் அமெரிக்கா தலையிடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரூபியோ, மும்பையில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் அமைதியான போராட்டங்களின்போது அதிகப்படியான பலப்பிரயோகம் இடம்பெறுவதாகவும், போராட்டக்காரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா. நிபுணர்கள் முன்னதாக வலியுறுத்தியிருந்தனர்.
இதற்கிடையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் முறைகேடுகள் இடம்பெறுவதாகப் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனினும், வாக்காளர் பட்டியல்களைச் சீரமைப்பதற்கான சட்டபூர்வ நடவடிக்கையே முன்னெடுக்கப்படுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் முடிவுகளில் தலையிடும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என்பதை ரூபியோவின் கருத்துகள் வெளிப்படுத்தியுள்ளன.




