போராட்டங்களை ஒடுக்காதீர்: இந்தியா அரசிடம் ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்து
போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அதிகப்படியான பலப்பிரயோகத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர்கள் , இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அண்மையில் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாகவும், சிலர் தகாத முறையில் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஐ.நா. நிபுணர்கள், இந்திய அதிகாரிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் அண்மைய வாரங்களில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதே இந்தப் போராட்டங்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
வாக்காளர் பட்டியல்களைத் திருத்தும் நடவடிக்கை, பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) சாதகமாக அமையும் என எதிர்ப்புத் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டங்களின்போதும், ஆயுதமற்ற மாணவர்கள் மீது பொலிஸார் தடியடித் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுத்ததாகவும் ஐ.நா. நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட சுயாதீன நிபுணர்கள், அதிகப்படியான பலப்பிரயோகத்தை உடனடியாக நிறுத்துமாறும், பொதுக்கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பொதுவான தடைகளை நீக்குமாறும் இந்திய அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.




