இந்தியாவில் CJP பிரமுகரின் கடவுச்சீட்டு முடக்கம்? லண்டனம் விஜயம் ரத்து
இந்தியாவின் கொக்குரோச் ஜனதா கட்சியின் (CJP) இணை ஒருங்கிணைப்பாளரும் பேச்சாளருமான சௌரவ் தாஸின் கடவுச்சீட்டில் பிறந்த இடம் தொடர்பான தகவல்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகக் கூறி, அவரது வெளிநாட்டுப் பயணத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (23) சென்னை பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகம் அவருக்கு விளக்கம் கோரும் அறிவித்தலை அனுப்பியுள்ளது.
ஆதார் அட்டை, கடவுச்சீட்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களில் பிறந்த திகதி, பிறந்த இடம் மற்றும் தந்தையின் பெயர் தொடர்பாக முரண்பாடுகள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஏழு நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் விளக்கமளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதிக்குள் பதிலளிக்கத் தவறினால், 1967ஆம் ஆண்டின் கடவுச்சீட்டுச் சட்டத்தின் கீழ் அவரது கடவுச்சீட்டு முடக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், லண்டனில் நடைபெறவிருந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகச் சென்ற சௌரவ் தாஸ், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அவர், தனக்கு அனுப்பப்பட்ட அறிவித்தலை விமான நிலையத்துக்குச் செல்லும் வரை கவனிக்கவில்லை என்றும், தனது வெளிநாட்டுப் பயணத்தைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும், கடவுச்சீட்டு தொடர்பான மறு சரிபார்ப்பு நடவடிக்கை நிறைவடைந்து அதிகாரிகளின் அனுமதி கிடைத்த பின்னர், அதே கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மீண்டும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




