மூன்று முக்கிய முஸ்லிம் நாடுகளின் விசேட கூட்டம் நாளை: நடக்கப்போவது என்ன?
பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தமக்கிடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகளை இஸ்லாமாபாத்தில் நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) நடத்தவுள்ளன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சவூதி அரேபியா மற்றும் துருக்கியின் வெளிவிவகார அமைச்சர்கள் பாகிஸ்தானுக்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மக்காவில் மூன்று நாடுகளும் இணைந்து பாதுகாப்பு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருந்தன. இதன்படி, ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்றின் மீது மற்றொரு நாடு அல்லது குழுவினால் ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் வகையிலான பரஸ்பர பாதுகாப்பு ஏற்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிராந்திய பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள பின்னணியில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
நேட்டோ அமைப்பில் இரண்டாவது மிகப்பெரிய இராணுவத்தைக் கொண்ட துருக்கி, இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களைக் கொண்டுள்ளதுடன் உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகத் திகழும் சவூதி அரேபியா, அணுவாயுதங்களைக் கொண்ட ஒரே முஸ்லிம் நாடான பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் மூன்று நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




