இந்தியா செய்தி தமிழ்நாடு

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்: தவெக பிரமுகர் உட்பட நால்வர் கைது

இலங்கைக்கு கடத்துவதற்காக  ரூ. 135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் (ஐஸ் போதைப்பொருள்) பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்த தவெக நிர்வாகி உட்பட 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். 
இலங்கைக்கு கடத்துவதற்காக  ரூ. 135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் (ஐஸ் போதைப்பொருள்) பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்த தவெக நிர்வாகி உட்பட 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.
நாகையில் இருந்து இலங்கைக்கு   மெத்தம்பெட்டமைன் கடத்தப்படுவதாக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் புலனாய்வு இயக்குநரக (திருச்சி மண்டலம்) பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து நேற்று காலை 6 மணியளவில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சுகன்(27) என்பவர் வீட்டுக்கு 16 பேர் கொண்ட அதிகாரிகள் வந்தனர்.
அங்கு சோதனை நடத்திய அவர்கள், சுகன், அவரது சகோதரர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி வேளாங்கண்ணி அருகே கீழப்பிடாகை சிந்தாமணி பிரதான வீதியை சேர்ந்த நாகை மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான பூபாலன் (42) என்பவர் மூளையாகவும், பின்புலமாகவும் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் பூபாலன் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் பூபாலனின் சகோதரர் பார்த்திபன்(29), பிரதாபராமபுரம் யாதவர் தெருவைச் சேர்ந்த சதீஷ்(30) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பூபாலன் மனைவி பிரேமியா இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், இதை பூபாலன் தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு நண்பர்கள் மூலம் போதைப் பொருட்களை கடத்தி வந்துள்ளார்.
இதையடுத்து, பூபாலன், சுகன், பார்த்திபன், சதீஷ் ஆகிய 4 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனர்.
பின்னர், கைது செய்யப் பட்ட 4 பேரையும் நாகை சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.100 கோடி முதல் ரூ.135 கோடி வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்சியை விட்டு நீக்கம்
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பூபாலனை கட்சியை விட்டு நீக்கி தவெக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், ‘நாகை மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்த பூபாலன், பல கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் மத்திய போதைப் பொருள் கட்டுப்பாடு உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனவே கட்சியின் கண்ணியம், நற்பெயர் மற்றும் ஒழுக்க கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக செயல்பட்ட காரணத்தால் பூபாலன் கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். எனவே நிர்வாகிகள் யாரும் அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என்று அறிவித்துள்ளார்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி