பட்ஜட் வெளிவரும் நிலையில் அவசர தேர்தலை கோருகிறது இலங்கை எதிரணி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டம் இன்று முன்வைக்கப்படவுள்ள நிலையில், மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் மக்கள் தமது தெளிவான பதிலை வழங்குவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்குப் பதிலடி கொடுக்க மக்கள் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முடிந்தால் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்துக்குச் சவால் விடுத்தார்.




